அசோகமித்திரன் (1931 - 2017)
அசோகமித்திரன்
(1931 - 2017)
அறிமுகம்
அசோகமித்திரன் தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.
1996-இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஐதராபாத்தைக் கதைக்களமாகக் கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துகளை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.
ஆக்கங்கள்
அசோகமித்திரன் 1957-ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். 9 நாவல்கள், 16 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்களுடன் ஆங்கிலத்திலும் ஒரு நூல் எழுதியுள்ளார்.
சிறுகதைகள்
அப்பாவின் சிநேகிதர், உண்மை வேட்கை, காலமும் ஐந்து குழந்தைகளும், தந்தைக்காக, நாடகத்தின் முடிவு, பிப்லப் சௌதுரியின் கடன், முறைப்பெண், வாழ்விலே ஒருமுறை, விமோசனம்
நாவல்கள்
ஆகாசத்தாமரை, இன்று, ஒற்றன், கரைந்த நிழல்கள் , தண்ணீர், பதினெட்டாவது அட்சக்கோடு, மானசரோவர்
குறுநாவல்கள்
இருவர், விடுதலை, தீபம், விழா மாலைப் போதில் பிற
அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2
கட்டுரைகள்
அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2
தகைமைகளும் விருதுகளும்
இவருக்குத் தமிழ்நாடு அரசு பரிசுகள் மும்முறையும் இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977 இலும் 1984 இலும் இருமுறையும் கிடைத்தன.
இவருக்கு இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை கிடைத்தது. மேலும் 1973-74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது.
லில்லி நினைவுப் பரிசு, 1992